`காங்கிரஸின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது' - பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, காங்கிரஸின் நிலைப்பாடு முற்றிலும் வெளிப்பட்டுவிட்டது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

பிரகாஷ் ஜவடேகர்

Photo Credit - ANI

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களவையில் கடந்த 20-ம் தேதியன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்தது. இதற்கு, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. இது தொடர்பாக மக்களவையில் தொடங்கிய விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையின் கீழ் நடைபெற்றுவரும் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பேச்சின் முடிவில், மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல், யாரும் எதிர்பாராத வண்ணம் மோடியைக் கட்டிப்பிடித்தார். ராகுலின் இந்தச் செயல் தலைப்புச் செய்தியானது. 

இந்நிலையில், மாகராஷ்டிரா மாநிலம், புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, காங்கிரஸின் நிலைப்பாடு முற்றிலும் வெளிப்பட்டுவிட்டது. பிரதமர் மோடியை ராகுல் கட்டிப்பிடித்தபோதே, அவரிடத்தில் எந்தவொரு பிரச்னையும் இல்லை என்று தெரிந்துவிட்டது. பா.ஜ.க மீது காங்கிரஸ் குற்றம் சுமத்த எந்தக் காரணங்களும் இல்லை' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!