வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (23/07/2018)

கடைசி தொடர்பு:14:05 (23/07/2018)

அதிக வருவாய் ஈட்டும் ஐ.ஐ.டி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு! 2-வது இடத்தில் சென்னை

இந்தியாவிலேயே மும்பை ஐ.ஐ.டி தான் அதிக வருவாய் ஈட்டுவதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஐ.ஐ.டி

நாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், மும்பை ஐ.ஐ.டி நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, ஆலோசனை வழங்குதல், காப்புரிமைப் பெறுதல் போன்றவற்றில் அதிக வருவாயை ஈட்டியுள்ளது இந்த நிறுவனம். கடந்த 2017-18 கல்வியாண்டில் மட்டும் மும்பை ஐ.ஐ.டியின் வருமானம் சுமார் 17.99 கோடி ரூபாய். 2016-17 ஆண்டு வருமானம் 17.11 கோடியாகவும் 2015-16-ம் ஆண்டில் 10.55 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, 11.67 கோடி ரூபாயுடன் சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் இரண்டாவது இடத்தையும், 10.61 கோடி ரூபாயுடன் டெல்லி ஐ.ஐ.டி நிறுவனம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

இது குறித்துப் பேசிய மனித வள மேம்பட்டுத் துறை அதிகாரிகள், ``இந்தியாவில் கௌஹாத்தி, கான்பூர், மேற்கு வங்கத்தில் உள்ள காரக்பூர் ஆகிய ஐ.ஐ.டி.களைச் சேர்த்து மொத்தம் 23 நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய உதவித்தொகைக்கும் நிறுவனங்களில் ஆண்டு வருவாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.