வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (23/07/2018)

கடைசி தொடர்பு:15:50 (23/07/2018)

சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டம் - இனி ரூ.250 டெபாசிட் செய்தால் போதும்

பெண் குழந்தைகளுக்கான வங்கி கணக்கு திட்டமான சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டத்தில் இனி ரூ.250 டெபாசிட் செய்தால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகள்

நாடு முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்குச் சிறு சேமிப்பு முறையான சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டத்தைக் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் அல்லது குறிப்பிட்ட சில வங்கிகள் மூலம் சிறப்பு வங்கிக் கணக்கை தொடங்க முடியும் . இந்தக் கணக்கை குழந்தையின் பெற்றோர்கள் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள காப்பாளர் மட்டுமே தொடங்க முடியும். மேலும், ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். 

தற்போது இந்தத் திட்டத்தில் சில விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி முன்னதாக குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது அது ரூ.250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்தத் திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். அதில், திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 2017-ம் ஆண்டு வரை 1.26 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்திலும் சுமார் 19,183 கோடி ரூபாய் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.