வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (23/07/2018)

கடைசி தொடர்பு:17:10 (23/07/2018)

ரத்தவெள்ளத்தில் கிடந்த அண்ணன், அண்ணி! தம்பியைப் பதறவைத்த கொலை

சிலிகுரியில் கணவன்- மனைவி இருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கொலை

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியைச் சேர்ந்தவர்கள் அஜய் குஷ்வா - மினா  தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜய் குஷ்வா கேட்டரிங் சர்வீஸுக்கு ஆட்களைப் பிடித்துக்கொடுக்கும் ஏஜென்சியை நடத்திவந்துள்ளார். இவரது வீடு, சுகந்தா நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு அஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகாமல் பக்கத்து அறையில் இருந்துள்ளனர். இதுகுறித்து அஜய்யின் சகோதரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய அஜய்யின் சகோதரர்,  “வழக்கமாக இரவு வீட்டுக்குச் செல்லும்போது கதவுகள் பூட்டியிருக்கும். ஆனால், அன்று கதவுகள் திறந்திருந்தன. வீட்டின் கேட் கூட பூட்டப்படவில்லை. எப்போதும் எனது சகோதரர்தான் கதவைத் திறப்பார்; அன்று அவ்வாறு இல்லை. உள்ளே சென்று பார்த்தபோது, எனது சகோதரரும் அவரது மனைவியும் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தனர். இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தேன்” என்றார்.

காவல்துறையினர் கூறுகையில், தம்பதியினரை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொலை செய்துள்ளனர். கொலைக்கான காரணம்குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளோம். விசாரணைக்குப் பின்னரே முழுவிவரமும் தெரியவரும் என்றனர்.