புராரி கூட்டு தற்கொலை - எஜமானர்களைப் பிரிந்த சோகத்தில் மாரடைப்பில் இறந்த நாய்

புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட வீட்டினர் வளர்த்த நாய் தன் எஜமானர்களைப் பிரிந்த சோகத்தில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளது.

புராரி நாயுடன் காப்பக ஊழியர்

ஜூலை 1, டெல்லி புராரி பகுதியைப் பெரும் அச்சத்துக்குள்ளாக்கிய மிகப்பெரும் சம்பவம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுதான். அந்த வீட்டைக் கடக்கும் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே செல்கின்றனர். மொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது இந்தக் குடும்பத்தின் தற்கொலை.

தற்கொலைக்குப் பிறகு, அந்த வீட்டில் கிடைத்த பொருள்கள் மற்றும் வித்தியாசமாகப் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் ஆகியவை இந்த மரணத்தில் மேலும் மர்மத்தை உண்டாக்கியது. 100 குற்றப்பிரிவு அதிகாரிகள், 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வீட்டிலிருந்து கிடைத்த 11 போன்களின் அழைப்பு விவரங்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டன. மேலும், அவர்கள் இறப்பதற்கு முன்னதாக 72 மணி நேரத்துடைய சிசிடிவி காட்சிகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு சோதனைகள், விசாரணைகள் நடைபெற்றும் இன்னும் அந்தக் குடும்பம் உயிரிழந்ததுக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் டாமி என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளும் முன் டாமியை மாடியில் இருந்த ஒரு கம்பியில் கட்டிவைத்துள்ளனர். தற்கொலை சம்பவம் தெரிந்த பிறகு, காவல் துறையினர் அந்த நாயை மீட்டு விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். கூட்டுத் தற்கொலைக்குப் பிறகு அந்த நாய் மிகவும் மனச்சோர்வுடன் இருந்ததாகக் காப்பகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாக நாய் சற்று தேறினாலும் மனதளவில் மிகுந்த பாதிப்பை சந்தித்ததாகவும் வெளியில் அழைத்துச் சென்றால் தன் எஜமானர்கள் எங்கேயாவது இருக்கிறார்களா என்பதைச் சுற்றும் முற்றும் தேடியதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில்  வழக்கம்போல்  நேற்று டாமியை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர் காப்பகத்தினர் . மாலை 6 மணிக்கு மீண்டும் காப்பகம் திரும்பியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நாய் இறந்துள்ளது. தன் எஜமானர்கள் பிரிந்த சோகத்தினாலேயே மிகுந்த மன வேதனையில் நாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நாயைப் பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!