சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருமுடி கட்டிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. 

சபரிமலை - பிளாஸ்டிக்

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கேரளாவிலிருந்து மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் அனைத்திலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரக்கூடிய சபரிமலை ஐயப்பன் கோயில், மேற்குத் தொடர்ச்சி மலையில் சூழலியல் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வருவதால் அடர்ந்த வனப்பகுதியின் சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. ஏற்கெனவே இரு வருடங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோயிலில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து பக்தர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வந்தது. 

அதனால், கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளான பி.ஆர்.ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மீண்டும் அத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் இன்று வெளியிட்ட உத்தரவில், `சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவர தடை விதிக்கப்படுகிறது. சபரிமலை சந்நிதானம், பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

அத்துடன், பக்தர்கள் எடுத்து வரக்கூடிய இருமுடிகட்டு உள்ளே பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் இருக்கக் கூடாது. இதுகுறித்து தந்திரி சார்பாகப் பக்தர்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். கேரளாவில் உள்ள பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிமாநில பக்தர்களுக்கும் நீதிமன்ற உத்தரவு குறித்து தெரியப்படுத்திட வேண்டும். வனத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், இதை அனைத்து பக்தர்களும் கடைப்பிடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!