''என் மகன் மரணித்து இந்த வீட்டைப் பெறணுமா?''- கண்களைக் குளமாக்கிய அபிமன்யூ பெற்றோர்

ர்ணாகுளம் மகராஜா கல்லூரியில் படித்துவந்த அபிமன்யூ என்ற தமிழ் இளைஞர், மதவாதிகளில் கொலைசெய்யப்பட்டார். ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தாயும் தந்தையும் கூலித் தொழிலாளர்கள். இடுக்கி மாவட்டம் வட்டவடா என்ற கிராமம்தான் இவரின் சொந்த ஊர்.  வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் அபிமன்யூதான். படித்துமுடித்து வேலைக்குச் சென்று தாய் தந்தைக்கு சொந்த வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. கல்லூரியில் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து அபிமன்யூ துடிப்புடன் பணியாற்றிவந்தார். மதவாதிகளின் கண்களுக்கு இவரது ஆணித்தரமான பேச்சு எரிச்சலை ஊட்டியதன் விளைவாக, கல்லூரி வளாகத்தில்வைத்தே அவர்  குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையில், எஸ்டிபிஐ அமைப்பின் துணை அமைப்பான பாப்புலர் ஃப்ரெண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. 

அபிமன்யூ பெற்றோர்

இந்நிலையில், அபிமன்யூவின் 'சொந்த வீடு 'கனவு குறித்து மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தெரியவந்தது.  அவரின் ஆசையை நிறைவேற்ற சி.பி.எம் கட்சி முடிவுசெய்தது. இதையடுத்து, வட்டவடா பகுதியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில்  அவரின் பெற்றோருக்கு வீடு கட்ட நிலம் தேர்வுசெய்யப்பட்டது. கேரள சி.பி.எம் கட்சித் தலைவர்  கொடியேறி பாலகிருஷ்ணன் இன்று வீட்டுக்கான கட்டுமானப்பணியைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய கொடியேறி பாலகிருஷ்ணன்,  ''எங்கள் அமைப்பின் தொண்டர் சிந்திய ரத்தத்துக்கு சி.பி.எம் கட்சியால் பழி வாங்க முடியும். ஆனால், வன்முறை எதற்கும் தீர்வாகாது. ஆர்.எஸ்.எஸ்,  எஸ்.டி.பி.ஐ அமைப்புகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். எஸ்டிபிஐ கட்சி ஐ.எஸ் பாணியிலான தீவிரவாதத்துடன் செயல்படுகிறது'' என்று பேசினார். 

தமிழ் இளைஞர் அபிமன்யூ

'என் மகன் மரணித்துதான் இந்த வீட்டை நாங்கள் பெறணுமா?' என்று அபிமன்யூவின் பெற்றோர் அழுதது சுற்றியிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. அபிமன்யூவின் பெற்றோருக்கு 10 சென்ட் நிலத்தில் ஒரு மாடியுடன் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சி இதற்கான நிதியைத் திரட்டியுள்ளது. வட்டவடா கிராமத்தில் அபிமன்யூவின் பெயரில் 2000 சதுர அடியில் அபிமன்யூ  மகராஜா என்ற பெயரில் லைப்ரரி உருவாக்கப்பட உள்ளது. இங்கு, 2 லட்சம் புத்தகங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Pic Courtesy - Indian Express

Do you like the story?

Please Appreciate the Author by clapping!