வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (23/07/2018)

கடைசி தொடர்பு:17:55 (23/07/2018)

நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை! - பா.ஜ.கவை விளாசும் சிவசேனா

'இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை' என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

உத்தவ் தாக்கரே

பா.ஜ.க-வுடன் 25 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்த கட்சி சிவசேனா. இந்தக் கூட்டணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுக்கு இன்று பேட்டி அளித்தார். அதில், 'இந்துத்துவா கொள்கையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில், ஒவ்வொருவரும் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கவனத்தை செலுத்துவது என்பது போலியானது. யாரேனும் அரசை விமர்சித்தால் அவர்கள் தேச விரோதிகள் அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு கேள்வி கேட்பதற்கான அதிகாரம் உள்ளது. யார் தேச விரோதிகள் என்று முடிவுசெய்வதற்கான அதிகாரம் பா.ஜ.க-வுக்குக் கிடையாது. நாங்கள், அரசின் ஒரு அங்கம்தான். ஆனால், அரசில் ஏதேனும் ஒன்று தவறாக இருந்தால், நாங்கள் நிச்சயம் கேள்வி கேட்போம். அரசு ஏதேனும் தவறாக நடவடிக்கைகள் எடுத்தால், அதை நாங்கள் விமர்சனம் செய்வோம். பசுக்களை இறைச்சியாக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அதேநேரத்தில், பசுக்களைப் பாதுகாக்கும் நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. இது வெட்கப்படவேண்டியது. இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாக உள்ளன. பெண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை' என்று தெரிவித்துள்ளார்.