ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! - போலியான இணையத்தை இயக்கிய 8 பேர் கைது

வட மாநிலங்களில் போலி ரயில்வே வேலைவாய்ப்பு இணையதளத்தை நடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இணையதளம்

வட மாநிலங்களில், ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளம் உருவாக்கி சிலர் இயக்கிவந்துள்ளனர். இணையதளம் மூலம் வேலைக்குப் பதிவு செய்யும் ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா மூன்று முதல் ஐந்து லட்சம் வரை பெற்றுள்ளனர். தகவல் அறிந்த சி.பி.ஐ அதிகாரிகள் குற்றவாளிகளின் வீடுகளான, உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ, ஆக்ரா, ராஜஸ்தான் மாநிலம் சோமு, ஹரியானாவின் சோனிபட் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். பின்னர் குற்றம் உறுதியானதால் இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 26-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இது பற்றிப் பேசிய சி.பி.ஐ அதிகாரிகள், ``உண்மையான அரசு இணையதளம் போலவே போலியான ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதில் விண்ணப்பதாரர்கள் முதலில் தங்கள் படிப்புக்கான விண்ணப்பத்தைத் தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளனர். பிறகு அவர்களிடமிருந்து அடையாள அட்டைகள், புகைப்படங்கள், மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் பெற்றுள்ளனர். பின்னர் ஒவ்வோரு விண்ணப்பதாரரிடம் இருந்தும் தலா 3 முதல் 5 லட்சம் வரையில் பணம் பெற்றுள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து பல ஆவணங்கள், செல்போன்கள், வங்கி அட்டைகள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!