`சிறப்பு அந்தஸ்து வேண்டும்'- ஆந்திராவில் நடக்கும் பந்த் | YSR Congress Party workers stage protest in city demanding special status for Andhra Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (24/07/2018)

கடைசி தொடர்பு:13:00 (24/07/2018)

`சிறப்பு அந்தஸ்து வேண்டும்'- ஆந்திராவில் நடக்கும் பந்த்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மாநிலம் முழுவதும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரா

நீண்ட நாள்களாக ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி சார்பிலும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து தற்போது வரை மத்திய அரசு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. முன்னதாக இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் பலமுறை பேசிப் பார்த்தார். ஆனால், மத்தியில் இருந்து எந்த ஒரு பதிலும் வராத நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. 

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி-க்கள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் பல போராட்டங்கள் நடத்தினர். அதிலும் எந்த முடிவும் எட்டாத நிலையில், இறுதியில் அக்கட்சியின் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பா.ஜ.க அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்தத் தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்தது. 

பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாததால் கடந்த 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. பின்னர் 20-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. இந்நிலையில், மீண்டும் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ஜூலை 24-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று காலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்களைக் காவல்துறையினர் கைது செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பினால் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து திருப்பதிக்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.