நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி வியூகம்! | Ahead of next year Lok sabha election: Congress authorises Rahul gandhi to decide alliance !

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (24/07/2018)

கடைசி தொடர்பு:12:58 (24/07/2018)

நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி வியூகம்!

நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி வியூகம்!

ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களிலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தை, அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்க, காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட காரியக் கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள், கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அழைப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்சியின் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ராகுலுக்கு அளிக்கப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக கட்சியின் மூத்தத்  தலைவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஆலோசனை நடத்தினர்.

ராகுல்

நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆற்றிய உரை, நாடு முழுவதும் உள்ள சாமான்ய மக்களையும், மத்திய அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து, தேசிய அளவிலும், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, மாநிலங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் பி.ஜே.பி. தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து விடலாம் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ்  கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டு, புதிதாக 34 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நெறிமுறைக் குழுவை அமைத்தார். இதைத் தொடர்ந்து, 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரியக் கமிட்டியை ராகுல் காந்தி அண்மையில் அமைத்து அறிவிப்புச் செய்தார். இவர்களில் 23 பேர் உறுப்பினர்களாகவும், 19 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்பது பேரும் இருப்பார்கள். புதிதாக காங்கிரஸ் காரிய கமிட்டி அமைக்கப்பட்ட பின்னர், அதன் முதலாவது கூட்டம்  டெல்லியில் நேற்று கூடி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெறவுள்ள சில மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதித்தது.

காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "இந்தியாவின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். சோனியாவைத் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, "நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியை அதிகப்படுத்தும் பணிதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால். ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கத் தவறிய மக்களை தேடிப்பிடித்து, அவர்களைச் சந்தித்து கட்சி மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் நாம் பெறும் வகையில் உழைக்க வேண்டும். கட்சியில் கருத்துகளைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், ஒருவர் தவறான தகவலை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்" என்றார். அதன் பின்னர், எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்குப் பின்னரும் கூட்டணி பற்றித் தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளிக்க மேலிடத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பி.ஜே.பி. கூட்டணி அரசின் பல்வேறு தோல்விகளைச் சுட்டிக்காட்டியதுடன், நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் மோடிக்கு ஆதரவான புகழ்ச்சியையும் கடுமையாகச் சாடினார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 12 மாநிலங்களில் பலம்வாய்ந்த கட்சியாக உள்ளது என்றும், எஞ்சிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலங்களில் பலம் பொருந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்து செல்வாக்கு பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர்களின் பேச்சுகளைக் கவனமாக ராகுல் காந்தி கவனத்துடன் கேட்டுக் கொண்டார். 

இதற்கிடையே, அண்மையில் ராகுல் மக்களவையில் ஆற்றிய உரை, நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தோல்விகளை ராகுல் காந்தி முன்னெடுத்து வைத்தபோது, ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அனைத்துக்கும் மேலாக, தன் உரையை முடித்த கையோடு, ராகுல் காந்தி நேராக பிரதமரின் இருக்கைக்குச் சென்று, அவருக்குக் கைகொடுத்ததுடன், அவரை அணைத்துச் சென்றதை நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் வெளிப்படுத்தின. 

ராகுல் காந்தி, இப்போதுதான் முதிர்ச்சியடைந்த தலைவராக உருவெடுத்துள்ளார் என்றும், சாமான்ய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவரின் ஆவேச பேச்சு அமைந்தது என்றும் அந்த உரையை ஊடகங்களில் பார்த்த பல்வேறு தரப்பினரும் ராகுலைப் பாராட்டியவண்ணம் உள்ளனர். இதுபோன்றச் சூழ்நிலையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் அந்த மாநிலங்களில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி, காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுடன் ராகுல் காந்தி இப்போதே ஆலோசனையைத் தொடங்கி விட்டார்.

மக்களவையில் ராகுல்காந்தியின் பேச்சு மற்றும் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "ராகுல் காந்தியின் பேச்சை ஒட்டுமொத்த இந்தியர்களும் பாராட்டி வருகிறார்கள். மோடி தலைமையிலான அரசால், ஏழை, எளிய மக்கள் எந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதாக அந்தப் பேச்சு அமைந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக 14 ஆண்டுகளாக சிறப்பான சேவையை ராகுல் ஆற்றிக் கொண்டிருக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் அன்றாடப் பிரச்னைகள் பற்றி நன்கு உணர்ந்துள்ளார் அவர். அதன் காரணமாகவே, மோடி அரசின் பாதிப்புகளை ராகுல் காந்தியால் தெளிவாக எடுத்துக்கூற முடிந்தது. ராகுலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் கூறினாலும், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறவுள்ள ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றிபெறும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் தேர்தலை நோக்கிய எதிர்கால வியூகம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்