22 வருட பாசப்போராட்டம் - இந்தியத் தாயைக் கண்டுபிடித்த ஸ்பானிஷ் பெண் ஜீனத்!

ஒரு பெண், 22 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைத் தேடிவந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம்  புனேயில் நடந்துள்ளது. 

ஜீனத்

Photo Credit: Mid-day

இந்தியாவில் இருந்து தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை, 22 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைத் தேடிவந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், 14 மாத குழந்தையாக இருந்தபோது, ஒரு தம்பதியினர்  ஜீனத் என்ற அந்தப் பெண்ணை தத்தெடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பெண், தனக்கு 10 வயதாக இருந்தபோது வளர்ப்புப் பெற்றோர்களுடன்  பெற்ற தாயைத் தேடி இந்தியா வந்துள்ளார். அப்போது,  அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், விரக்தியில் திரும்பிச்சென்றுவிட்டனர். தற்போது அந்தப்பெண், உளவியல் (psychology) படித்துவருகிறார். கடந்த மூன்று வருடங்களாக உணவகம் ஒன்றில் பணியாற்றி, அதில்  கிடைத்த வருமானத்தின்மூலம் இந்தியா வந்துள்ளார். இங்கு வந்து தன் தாயை சந்தித்தவருக்கு, அவரது பிறப்புகுறித்து அதிர்ச்சிகரத் தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் தாயார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதும், அதன்மூலம் இவர் பிறந்ததும் தெரியவந்துள்ளது.

இவர்களின் சந்திப்பு, பார்ப்போரை கண்கலங்கச்செய்தது. இருவரும் கட்டித்தழுவி கண்ணீர்விட்டு அழுதனர். ஜீனத்துக்கு ஸ்பானிஷ் தவிர வேறு மொழி தெரியவில்லை. அவரது தாயாருக்கு இந்தி மட்டுமே தெரியும். 

இதுகுறித்துப் பேசிய அந்தப் பெண்ணின் தாயார், ``எனக்கு 21 வயதாக இருக்கும்போது உறவினர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்.  நான் கர்ப்பமானதும் என் குடும்பத்தினர் என்னை ஒதுக்கினர். என் கருவைக்  கலைக்க நான்  விரும்பவில்லை. நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் கூலிவேலை செய்துகொண்டிருந்தேன். எனது குழந்தையை கஷ்டப்படுத்த விரும்பவில்லை" என்றார்.


ஜீனத் பேசுகையில்,  ‘எனது தாயாரின் வலியை நான் மறக்க மாட்டேன். அடுத்த முறை நான் இந்தியா வரும்போது, கண்டிப்பாக ஹிந்தி கற்றுக்கொள்வேன்’ என்றார்

Source: Mid-day

Do you like the story?

Please Appreciate the Author by clapping!