வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (24/07/2018)

கடைசி தொடர்பு:14:55 (27/07/2018)

ஐஜிஎஸ்டி பிரச்னை... ஏற்றுமதியாளர்களுக்கு உதவ உதவி மையங்கள்!

ஐஜிஎஸ்டி பிரச்னை... ஏற்றுமதியாளர்களுக்கு உதவ உதவி மையங்கள்!

`ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐஜிஎஸ்டி) திரும்ப அளிப்பதற்கான உதவி மையங்களை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) அலுவலகங்களில் அமைக்க வேண்டும்’ என்ற தமது யோசனையை ஏற்றுக் கொண்டதற்காக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் டாக்டர். ஏ. சக்திவேல் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (AEPC) அலுவலகத்திலும் இந்த உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.

ஐஜிஎஸ்டி

 

பல்வேறு காரணங்களினால் குறு, சிறு மற்றும் நடுத்தர ரக ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்குத் திரும்பி அளிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை விரைவாகத் திரும்ப அளிப்பது தொடர்பான பிரச்னைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கவனத்துக்கு டாக்டர். ஏ. சக்திவேல் கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து, இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரி வரவைத் திரும்ப அளிக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து, ஐஜிஎஸ்டி-யைத் திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்னைகளுக்குத் விரிவான தீர்வு காண, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு அலுவலகங்கள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த உதவி மையங்கள்  ஆகஸ்ட் 1-ம் தேதி வரை செயல்படும். சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும். 

ஏற்றுமதியாளர் எந்த நகரைச் சேர்ந்தவர் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், அனைத்துத் துறைமுகங்கள் ஐஜிஎஸ்டி சக்திவேல்தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் இந்த மையங்கள் உதவிகரமாக இருக்கும். மேலும், என்ன தவறுகளினால் வரி வரவைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது மற்றும் அந்தத் தவறுகளை எப்படிச் சரிப்படுத்துவது போன்ற தகவல்களையும் இந்த மையங்கள் அளிக்கும்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ள டாக்டர். ஏ. சக்திவேல், "இது அனைத்துத் துறை ஏற்றுமதியாளர்களுக்கும் பயனளிக்கக் கூடிய ஒன்று. எனவே, அனைத்துத் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரும் இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ என்று கேட்டுள்ளார்.

ஏற்றுமதியாளர்கள் சென்னையிலுள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு அலுவலகத்தை ஸ்பென்சர் பிளாஸா, எண் 706, 7-வது தளம், 769, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரியிலோ அல்லது 044-28497744/55/66 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது fieosr@fieo.org என்ற இமெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என சக்திவேல் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக வரித்தாக்கல் செய்வதிலும், செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படவில்லை என்றும், ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐஜிஎஸ்டி) திரும்ப அளிப்பதில் கால தாமதம் நிலவுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வரியைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பணப்புழக்கம் பாதிக்கப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தொடர்ச்சியாகப் புகார் அளித்த நிலையில், இந்தக் காலதாமதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்குகளில் உள்ள குளறுபடிகளால்தாம் தாமதம் நிகழ்வதாக மத்திய வரிகள் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ஜிஎஸ்டிஆர் மற்றும் ஏற்றுமதிக்கான ரசீதுகளில் தரப்பட்ட தவறான விவரங்களினாலும், 70 சதவிகித ஐஜிஎஸ்டி தாக்கல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டதாலும், ஏற்றுமதி வரியைத் திரும்பப் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் குறியீடு முறையினாலும் தாமதம் ஏற்பட்டதாக வரிகள் ஆணையம் தெரிவித்திருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்