வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (24/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (24/07/2018)

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி! தாஜ்மகாலைப் பாதுகாக்க உ.பி அரசு நடவடிக்கை

தாஜ்மகாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாஜ் மகால்

காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மகாலைக் காண உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால், கடந்த சில வருடங்களாகத் தாஜ்மகால் தனது பொலிவை இழந்து வருவதாகவும் அதைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தாஜ்மகாலை உங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை மூடி விடுங்கள் அல்லது இடித்துவிடுங்கள். உங்கள் அக்கறையின்மை காரணமாக நாட்டுக்கு ஏற்படும் பெரிய இழப்பை நீங்கள் உணரவில்லையா, தாஜ்மகாலைப் பாதுகாப்பதா அல்லது இடிப்பதா என்பதை இந்திய அரசாங்கம் முடிவு செய்துகொள்ளட்டும். தாஜ்மகால் விவகாரத்தில் மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் உரிய அக்கறையின்றி செயல்படுகிறது. தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்கான திட்டத்தையும் உத்தரப்பிரதேச அரசு வகுக்கவில்லை. இதன் காரணமாக அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" எனக் காட்டமாகக் கூறினர்.

இந்த நிலையில் தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்காகச் செயல் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தாஜ்மகாலைச் சுற்றி பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிக்கவுள்ளதாகவும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுற்றியுள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது