வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (24/07/2018)

கடைசி தொடர்பு:18:35 (24/07/2018)

`நடத்தையைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது'- பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிபதி காட்டம்

"பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் நடத்தையைக் காரணம் காட்டி, எந்த ஆணும் தான் செய்த தவற்றிலிருந்து தப்பிக்க முடியாது" என்று பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம்

கடந்த 2003-ம் ஆண்டு, ராமகிருஷ்ணன் கணேஷ் வாக் என்பவர், 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், ராமகிருஷ்ணன் கணேஷுக்கு 2005-ம் ஆண்டு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன் சில நாள்களுக்கு முன்பு, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில், 'தன்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், நல்ல நடத்தைகொண்டவர் கிடையாது. அதனால், என்  தண்டனைக் காலத்தைக் குறைத்து, என்னை விடுதலைசெய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனீஷ் பிட்லே, ''நீங்கள் சொல்கிறபடி அந்தப் பெண் ஒழுக்கம் குறைந்தவராக இருந்தாலுமே, இந்த வழக்கில் அது உங்களுக்கு உதவாது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் நடத்தையைக் காரணம் காட்டி, எந்த ஆணும் தான் செய்த தவற்றிலிருந்து தப்பிக்க முடியாது'' என்று காட்டமாகத் தெரிவித்ததோடு, சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்ததால், உடலில் ஏற்பட்ட காயங்கள், அந்தரங்க உறுப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது போன்றவற்றை மருத்துவ அறிக்கை தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதனால், கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை ராமகிருஷ்ணன் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்'' எனக் கூறி, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.