என்னைக் கட்டிப் பிடிப்பதற்கு முன் ராகுல் காந்தி 10 தடவை யோசிக்க வேண்டும்..! யோகி ஆதித்யநாத் ஆவேசம் | Rahul Gandhi will think 10 times before hug me, says Yogi Adityanath

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (24/07/2018)

என்னைக் கட்டிப் பிடிப்பதற்கு முன் ராகுல் காந்தி 10 தடவை யோசிக்க வேண்டும்..! யோகி ஆதித்யநாத் ஆவேசம்

ராகுல் காந்தி என்னைக் கட்டிப்பிடிப்பதற்கு முன்பு 10 தடவை யோசிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத்

பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசி முடித்த பின், பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்தார். ராகுல் காந்தியின் இந்தச் செயலுக்கு பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், `ராகுல் காந்தி, மோடியைக் கட்டிப்பிடித்தது வெறும் அரசியலுக்காகத்தான். இதுபோன்ற சம்பவத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதுபோன்ற அரசியல் செயல்களை நான் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குழந்தைத்தனமானது. சொந்தமாக முடிவு எடுக்கும் அறிவு கிடையாது. ஒரு புத்தியுள்ள மனிதனும் பிரதமரைக் கட்டிப்பிடித்திருக்க மாட்டான். ராகுல் காந்தி என்னைக் கட்டிப்பிடிப்பதற்கு முன்னர் 10 தடவை யோசிக்க வேண்டும். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக மாயாவதியோ அகிலேஷ் யாதவோ ஏற்பார்களா. ராகுலுக்கு கீழ் பணி செய்ய சரத் பவார் தயாராக உள்ளாரா, எதிர்கட்சிக் கூட்டணியின் தலைவர் யார் என்பதை ஏன் அவர்கள், அறிவிக்க மறுக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

60 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியையும் நான்கு ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், பசுக்களைக் கடத்துவதையும் பசுக்களைக் கறிக்காக வெட்டுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.