வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:08:06 (25/07/2018)

மாணவர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம் - சி.பி.எஸ்.இ-க்கு ராகுல் காந்தி கடிதம்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் வெளியான விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சி.பி.எஸ்.இ-க்கு கடிதம் எழுதியுள்ளார். 

ராகுல்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின், மாநிலங்கள், மதிப்பெண்கள், மொபைல் எண்கள், இமெயில் ஆகிய விவரங்களுடன் கூடிய தகவல்கள் வெளியானது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.எஸ்.இ-க்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், ``நீட் தேர்வு எழுதிய 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் தகவல்கள் முறைகேடாக வெளியாகியுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல்கள், சில இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்படுகிறது என்று செய்திகளில்   தெரிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது குறித்த தகவல்கள் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அதற்கு உடந்தையான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.