வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (25/07/2018)

கடைசி தொடர்பு:08:20 (25/07/2018)

``பா.ஜ.க-வை வீழ்த்தும் யாரையும் ஆதரிப்போம்” - ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார். கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்களை சந்திப்பது பா.ஜ.க-வை வீழ்த்தும் ஆலோசனைகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

ராகுல் காந்தி

இந்நிலையில், நேற்று ராகுல் காந்தி பெண் பத்திரிகையாளர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி ஒன்று கட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  இதில் கலந்துகொண்ட ராகுல், பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது ஒருவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை பிரதமர் வேட்பாளர்களாக அறிவித்து தேர்தலை சந்திக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ராகுல், ``2019 தேர்தலைப் பொறுத்தவரையில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் வெற்றி பெறுவது அவசியம். இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து மட்டும் சுமார் 22% பிரதிநிதிகள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வீழ்த்தும் சக்தி கொண்டை யாரையும் ஆதரிப்போம். அடுத்த பிரதமர்  என்பதெல்லாம், தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்பதை பொறுத்து மாறும் தன்மை கொண்டது” என்றார். மேலும், பா.ஜ.க கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் தற்போது அக்கட்சிக்கு எதிராக உள்ளது காங்கிரஸ் கட்சிக்குக்  கூடுதல் பலம் என்றார். 

மேலும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் பெண்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.