இந்தியா திரும்புகிறாரா விஜய் மல்லையா?

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடி செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்களை முடக்குவது தொடர்பாக அமலாக்கத் துறை எடுத்துள்ள நடவடிக்கையால், அவர் நாடு திரும்ப முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மல்லையா

பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் கடன் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துகளை முடக்கினர். லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர சட்ட ரீதியாகப் பல நடவடிக்கைகளை சி.பி.ஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான 13,900 கோடி மதிப்புள்ள சொத்துகள் அண்மையில் முடக்கப்பட்டன. மல்லையாவின் சொத்துகளை ஏலம் விட்டதன் மூலம் ரூ.963 கோடியை வசூலித்துள்ளதாக சமீபத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் அரிஜித் பாசு தெரிவித்தார்.

இந்நிலையில், கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தது. இதையடுத்து, மல்லையாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தின் முன் ஆஜராகும்படி மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், சொத்துகளை முடக்கம் செய்வது தொடர்பாக அமலாகத்துறை எடுத்த நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள சொத்துகள் முற்றிலுமாக முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!