கர்நாடக சட்டமன்றத்தில் பத்திரிகையாளர்களுக்குத் தடை - அதிரடி காட்டிய குமாரசாமி

கர்நாடக சட்டமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரும் வரக்கூடாது என அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். 

குமாரசாமி

கர்நாடக முதல்வர் குமாரசாமி தற்போது ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இனி பத்திரிகையாளர்கள் யாரும் விதான் சௌதாக்குள் (கர்நாடக சட்டமன்றம்) நுழையக்கூடாது என்பதுதான் அது. பத்திரிகையாளர்கள் பலர் அடிக்கடி சட்டமன்றத்தில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளைக் காணவருவதால் அவர்களின் வேலை தடைபடுவதைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், ஒரு நாளுக்குக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே உள்ளே வர முடியும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் சட்டமன்றத்துக்குள் தேவையில்லாமல் நுழைபவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு வாய்மொழியாகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது குறித்த எழுத்துப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

முதல்முறையாகக் கர்நாடக சட்டமன்றத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மீது சுமத்தப்படும் பொய்ச் செய்திகளை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக முதல்வர், தான் மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறியதை மீடியாக்கள் பெரிய அளவில் பேசின. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், கர்நாடக சட்டமன்றத்தில் தரகர்கள் மற்றும் இடைநிலையாளர்கள் அதிகம் சுற்றிவருவதை தடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!