வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (25/07/2018)

கடைசி தொடர்பு:13:34 (25/07/2018)

`சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது?' - உச்ச நீதிமன்றம் கேள்வி 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. விசாரணையில், ஏன் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என சரமாரியாக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி உள்ளனர். 

சபரிமலை

சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும், கேரள அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அப்போதிலிருந்து கேரளாவில் மாறி மாறி உண்டான ஆட்சிகளால், இந்த விஷயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகின.

இந்நிலையில், கோயிலில்10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 17-ம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட், இந்து மல்கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். இன்று நடைபெற்ற விசாரணையில், `ஏன் அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது. வழிபடுவது என்பது அடிப்படை உரிமை; அதைத் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்து மதத்தில் இந்தத் தடை உள்ளதா' என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.