வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/07/2018)

கடைசி தொடர்பு:14:54 (25/07/2018)

ஜீவனாம்சம் தொகையை சில்லறைகளாகக் கொடுத்து அலப்பறை செய்த கணவன்!

முன்னாள் கணவன் கொடுத்த ஜீவனாம்சத் தொகையை எண்ண முடியாமல், பெண் ஒருவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஜீவனாம்சம்

 

சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞரும் அவரின் மனைவியும் கடந்த 2015-ம் ஆண்டு நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளனர். மனைவிக்கு, மாதந்தோறும் ரூ.25,000 ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் தொகை வராததால் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அங்குதான் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் பேசினார்.  ``வழக்கறிஞராகப் பணியாற்றும் அவர் பெயரில் பல்வேறு இடங்களில் சொத்துகள் உள்ளன. ஆனால் நான், வாழ்வாதாரத்துக்காக மிகவும் சிரமப்படுகிறேன். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தற்போது பணம் அளித்துள்ளார். அவை அனைத்தயும் நாணயங்களாக வழங்கியுள்ளார். இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது. எந்த வங்கியிலும் இதை வாங்க மறுக்கின்றனர்” என்றார். இரண்டு நபர்களின் உதவியுடன் அவரின் முன்னாள் கணவர் கொடுத்த நாணயங்களை இரண்டு பைகளில் கொண்டுவந்தார். தன்னை துன்புறுத்துவதற்கான புதிய உத்தியைக் கடைப்பிடித்துள்ளதாக அந்தப் பெண் கூறினார்.

அவரின் கணவர் கூறியதாவது, ``ஜீவனாம்சத்தை 100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாகக் கொடுக்க வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை. நான் எனது  மூன்று ஜூனியர்கள் மூலம் இந்தத் தொகையை எண்ணிக் கொடுத்தேன். 26,400 ரூபாயை நாணயங்களாக வழங்கியுள்ளேன். மீதமுள்ள தொகையை 100 ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்துள்ளேன்'' என்றார். மேலும் அவர், ``என்னிடம் நோட்டுகளாக இல்லாததால் சில்லறையைக் கொடுத்தேன்'' என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாணயங்களை எண்ணுவதற்காக வழக்கை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.