இட ஒதுக்கீடு கோரும் மராத்திய அமைப்புகள்!’- மும்பையில் வெடித்த கலவரம்

மகாராஷ்டிராவில் உள்ள மராத்திய அமைப்புகள், இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

போராட்டம்

PC : ANI

மராத்திய அமைப்புகள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, மகாராஷ்டிராவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 'மராத்தா கிராந்தி மோர்சா' என்ற அமைப்பு, இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றது. மத்திய மகாராஷ்டிராவில் இந்த போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே கலவரம் வெடித்தது. இதில், ஒரு காவலர் இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.  ஒன்பது போராட்டக்காரர்கள் படுகாயமடைந்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர் ஒருவர், திடீரென கோதாவரி நதியில் குதித்து தற்கொலைசெய்துகொண்டார். இது, போராட்டத்தை மேலும் தீவிரமடையச்செய்துள்ளது.

 மும்பையில் இன்று, முழு அடைப்புக்கு மராத்திய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதை ஏற்று, தனியார் பஸ் நிறுவனங்கள் வாகனங்களை இயக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராமப்புறப் பகுதிகளில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. ஒளரங்காபாத்தில் தீயணைப்பு வண்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஆங்காங்கே  வாகனங்களின் டயர் கொளுத்தப்பட்டது. அதேபோல, பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபடவும் போராட்டக்காரர்கள் முயன்றனர். பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. இந்தப் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், `மக்கள் அமைதி காக்க வேண்டும்; இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்துவருகிறது' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!