Published:Updated:

3 மாதம்; 216 குழந்தைகள்! - உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்

சத்யா கோபாலன்

உத்தரகாண்டில், பெண்குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படும் கொடூரம் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

குழந்தை
குழந்தை

பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைப் பாதுகாக்க முடியாது, அவர்களுக்கான திருமணம், இதரச் சடங்குகள் என நிறைய செலவு இருக்கும் என்பதால், பெண் குழந்தைகள் பிறந்தாலே கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் அந்தக் காலத்தில் நடைமுறையிலிருந்தது. இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண் குழந்தைகளும் வளர்ந்துவருகின்றனர்.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை

`மத்திய அரசு மகளைக் காப்பாற்றுங்கள்; மகளுக்குக் கற்பியுங்கள்’ என்ற திட்டத்தைத் தீவிரமாக ஊக்குவித்து வரும் இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

அங்குள்ள அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி `உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி நகரைச் சுற்றியுள்ள சுமார் 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதத்தில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லை’ இது பற்றிப் பேசியுள்ள மாவட்ட நீதிபதி ஆஷிஷ் சௌதான், ``பிரசவத்தின்போது பெண் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் மற்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை எது பாதிக்கிறது என்பது பற்றி சோதனை நடத்திவருகிறோம். இதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டுபிடிக்க விரிவான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை
குழந்தை

மேலும், உத்தரகாசியில் உள்ள கிராமங்களில் பணிபுரியும் சுகாதார ஆர்வலர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அனைத்துக் கிராமங்களிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட நீதிபதி. `` இந்தக் கிராமங்களில் மூன்று மாதமாக ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு இது வெறும் தற்செயலான விஷயம் என நினைக்கத் தோன்றவில்லை. இந்தச் சம்பவம், பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படுகின்றது என்பதை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.