வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (25/07/2018)

கடைசி தொடர்பு:16:42 (25/07/2018)

`ஹர்திக் படேல் குற்றவாளி..!' - இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பு

படேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேலுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது குஜராத் நீதிமன்றம். பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் அலுவலகத்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஹர்திக்

குஜராத் மாநிலத்தில், படேல் சமூகத்தினருக்கு  அரசு வேலை, கல்வியில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 2015-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தினார்  ஹர்திக் படேல். போராட்டத்தில், விஸ்நகர் தொகுதி சட்டமன்ற பா.ஜ.க உறுப்பினர் ருஷிகேஷ் படேலின் அலுவலகம் தாக்கப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் உட்பட 18 பேர்மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். விஸ்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. விசாரணை முடிவில், ` ஹர்திக் படேல் குற்றவாளி' என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

தீர்ப்பில், ஹர்திக், லால்ஜி படேல், மற்றும் ஏ.கே.படேல் ஆகியோர்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு  இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முன்னதாக, படேல் சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு, மாநில அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்து, வரும் ஆகஸ்ட் 25 -ம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணா விரதத்தைத் தொடர உள்ளதாக, பட்டிதர் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் பட்டேல், இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.