3-வது நாளாக புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்! | Share market for the day at close 25-07-2018

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (25/07/2018)

கடைசி தொடர்பு:17:47 (25/07/2018)

3-வது நாளாக புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!

தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் முடிவடைந்தாலும், இன்று வர்த்தக நேரம் முழுதும் சற்று மந்தமான நிலையிலேயே பங்குகளின் போக்கு காணப்பட்டது எனலாம்.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 36,947.18 என்ற புதிய உயரத்தைத் தொட்டபின், அந்நிலையிலிருந்து நழுவி, இறுதியில் 36,858.23 என்ற நிலையில், 33.13 புள்ளிகள். அதாவது 0.09 சதவிகித லாபம் மட்டுமே பெற்று முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 2.30 புள்ளிகள். அதாவது 0.02 சதவிகிதம் நஷ்டத்துடன் 11,132.00-ல் முடிவுற்றது.

ஜப்பான் நாட்டின் மத்திய வங்கி, அடுத்த வாரம் தன்னுடைய ஸ்டிமுலஸ் திட்டத்தை சற்று தளர்த்தக்கூடும் என்ற கணிப்பில், ஆசிய சந்தைகள் பெரும்பாலும் ஒரு மந்தகதியில் இயங்கின.

 

ஐரோப்பிய சந்தைகளிலும், நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜன்கர்  இடையேயான சந்திப்பின் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற யூகத்தில் முதலீட்டாளர்கள் ஒரு நிதானத்துடன் செயல்பட்டுவருவதால், ஒரு பெரிய ஏற்றமோ இறக்கமோ காணப்படவில்லை.

சந்தையின் சமீபத்திய ஏற்றங்களுக்குப் பின், முதலீட்டாளர்கள் சிறிது ப்ராபிட் புக் செய்ய எண்ணியதும், சந்தையின் இன்றைய மந்தமான போக்கிற்கு ஒரு காரணம்.

பவர், ரியல் எஸ்டேட், டெலிகாம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறை பங்குகள் சரிந்தன. ஆயில், ஆட்டோமொபைல், தகவல் தொழில் நுட்பம், வங்கி மற்றும் மருத்துவத் துறை பங்குகள் ஒரு கலப்படமான நிலையில் முடிவுற்றன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் 3.6%
பஜாஜ் ஃபைனான்சியல் 1.9%
ஸ்டேட் பேங்க் 1.7%
அதானி போர்ட்ஸ் 1.6%
டாடா ஸ்டீல் 1.5%
ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூடண்ட்சியல் 4.9%
என்.எம்.டி.சி 4.3%
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் 3.8%

விலை சரிந்த பங்குகள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 5.5%
என்.டி.பி.சி 4%
சன் டி.வி நெட்வொர்க் 3.2%
ஹெச்.சி. எல். டெக்னாலஜீஸ் 2.8%
ஐடியா செல்லுலார் 2.7%
ஆக்ஸிஸ் பேங்க் 2.6%
லூபின் 2.5%
டி.எல்.எப் 2.5%
அல்ட்ராடெக் சிமென்ட் 2.3%
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 2.3%

இன்று, மும்பை பங்குச் சந்தையில் 1374 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1261 பங்குகள் விலை சரிந்தும், 153 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.