வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:09:00 (26/07/2018)

பிரதமர் வீட்டில் மின்சாரப் பெட்டி இல்லை!- ஆர்டிஐ தந்த அதிர்ச்சி தகவல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் வீட்டின் மாத மின்சார செலவு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் வீட்டில் மின்சார பயன்பாட்டை அளவிடும் மீட்டர் பெட்டி இல்லை என்ற பதில் வந்துள்ளது. 

மீட்டர்

குர்கான் பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் வீட்டின் மின்சார செலவு தொடர்பான தகவல்களைக் கேட்டிருந்தார். பிரதமராக மோடி பதவியேற்றப் பிறகு நாட்டில் மின்சார செலவை தடுக்க எல்.இ.டி பல்புகள் பயன்படுத்த வேண்டும் என்றும் எல்.இ.டி பல்புகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் உள்ள மின்சார விளக்குகள் எல்.இ.டி பல்புகளாக மாற்றப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒன்றைக் கண்ட ஜகதீஷ் சிங், பிரதமர் வீட்டில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய கடந்த கால மின்சார செலவும் தற்போதைய செலவும் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய பொதுப்பணித்துறை, ``பிரதமர் வீட்டுக்கு எனத் தனியாக மின்சார அளவிடும் மீட்டர் கிடையாது. நாடாளுமன்றம், குடியரசுத் தலைவரின் ராஷ்ட்ரபதி பவன் மற்றும் பிரதமர் வீடு உள்ளிட்ட அரசுக் கட்டடங்களின் பராமரிப்புப் பணிகளை மத்திய பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது” எனக் கூறியுள்ளது. 

பின்னர், பிரதமர் இல்லத்தில் சாதாரண மின்சார விளக்குகள், எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட்டதுக்கான செலவு தொடர்பான கேள்விக்கு, இந்தக் கேள்விக்கு தற்போது பதில் தயாராக இல்லை என பதிலளித்துள்ளது மத்திய பொதுப்பணித்துறை.  ``பிரதமர் தான் இருக்கும் வீட்டில் மின்சார சேமிப்பில் கவனம் செலுத்துகிறாரா என்பதை சோதனை செய்ய இந்தக் கேள்விகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகக் கேட்டேன்” என்கிறார் ஜகதீஷ் சிங்.