டெல்லியில் பசியால் உயிரிழந்த குழந்தைகள்! - ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டும் கட்சிகள்

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள், பசியால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Photo credit - Ndtv

டெல்லி, மண்டவளியில் அரசு மருத்துவமனைக்குக் கடந்த 24.07.2018 அதிகாலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 8 வயது, 4 வயது மற்றும் 2 வயதுக்கு உட்பட 3 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். அதன் பிறகு, நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தைகள் வயிற்றில் உணவு இல்லாமல் பசியால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 

`தன் 15 வருட அனுபவத்தில் இதுபோன்ற ஒரு துயர சம்பவத்தைப் பார்த்ததில்லை. நாட்டின் தலைநகரில் உணவு கிடைக்காமல் பசியால் குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்று குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் அளித்துள்ளனர். ஆளும் ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ள, டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி, `இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. மிகவும் அவமானமாக இருக்கிறது. மானிய உணவை மத்திய அரசு வழங்குகிறது. அதை, முறையாகக் குடிமக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசாங்கத்தின் கடமை' என்று கூறியுள்ளார். `இது ஆம் ஆத்மி ஆட்சியின் தோல்வி' எனக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. `ரேஷன் பொருள்களை நேரடியாகப் பயனாளிகளின் வீட்டுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைத் தடுத்தது பா.ஜ.க' என்று ஆம் ஆத்மி சுட்டிக் காட்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, எப்படி குழந்தைகள் உயிரிழந்தனர் எனப் போலீஸார் கேட்டதற்கு `எனக்கு உணவு தாருங்கள்' என்று மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் பதில் பரிதவிக்க வைக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!