வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (26/07/2018)

கடைசி தொடர்பு:18:43 (26/07/2018)

கணினி முறையில் நீட் தேர்வு..! மத்திய அமைச்சர் அறிவிப்பு

'நீட் தேர்வு, வரும் காலங்களில் கணினி மூலமாக நடத்தப்படும்' என்று மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு, மத்திய அரசு சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. தமிழக அரசு நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையிலும், நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, நீட் தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்தியது. இந்த நிலையில், இனிவரும் காலங்களில் நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். அதை, தேசியத் தேர்வுகள் முகமை என்ற அமைப்பு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங், 'வரும் காலங்களில் கணினி மூலமாக நீட் தேர்வு நடத்தப்படும். கணினி வசதியுடன்கூடிய பள்ளி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வுகுறித்த அட்டவணை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்' என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.