`அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்' - தலைப்புச் செய்தியான கேரளப் பெண் உருக்கம் | I do not want any help, says Kerala student hanan

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (27/07/2018)

கடைசி தொடர்பு:11:30 (27/07/2018)

`அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்' - தலைப்புச் செய்தியான கேரளப் பெண் உருக்கம்

`சமூக வலைதளங்களில் ஹனனைப் பற்றித் தவறுதலாகப் பேசுவதை நிறுத்துங்கள்' என கடுகடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜே.கே.அல்போன்ஸ். இதனிடையில், அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்' என ஹனன் தெரிவித்துள்ளார். 

ஹனன்

Photo Credit - tweet/@sarathalpy

கேரள ஊடகங்களின் கடந்த இரண்டு நாள் தலைப்புச் செய்தி ஹனன். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் டாப் ட்ரெண்டானது #Hanan என்ற ஹேஸ் டேக். இதுமட்டுமல்லாமல், ஹனன் பற்றி வெளியான செய்தியை இணைத்து, கேரள திரைத்துறை நட்சத்திரங்கள் உட்பட அனைவரும் தங்களின் வலைதள பக்கங்களில் செய்தியைப் பகிர்ந்தனர். அப்படி என்ன செய்தார் இவர், எர்ணாகுளம், தம்மனம் பகுதியில் மீன் விற்று வரும் ஹனன் பி.எஸ்ஸி வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலையை சமாளிக்க, அதிகாலையில் எழுந்து தம்மனம் மீன் சந்தைக்குச் செல்லும் ஹனன், மீன்களை வாங்கி அங்குள்ள ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அதன் பிறகு தொடுபுழாவில் உள்ள கல்லூரிக்குச் செல்கிறார். கல்லூரி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தம்மனம் திரும்பும் அவர், மீன் விற்று வருகிறார். இதுதான் இவரது அன்றாட பணி. 

கூவிக்கூவி படுஜோராக அவர் மீன்களை விற்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ஹனன் பற்றிய செய்தி கேரளப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் பாராட்டியது ஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில், `ஹனன் பற்றி வெளியான செய்தி போலியானது' என்ற மீம்ஸ் ட்ரோல்கள் வெளியானது. ஹனன் பற்றி வெளியான செய்தி உண்மை என்று கல்லூரி முதல்வர் மற்றும் வட்டார நண்பர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். 

 ஜே.கே அல்போன்ஸ்இதையடுத்து, மத்திய அமைச்சர் ஜே.கே அல்போன்ஸ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ` குடும்பத்துக்கு உதவ தன்னால் இயன்ற உதவியை அப்பெண் செய்து வருகிறார். ஹனனைப் பற்றி தவறுதலாகப் பேசுவதை நிறுத்துங்கள்' என்று பதிவிட்டுள்ளார். அதனுடன், 'பிரதமர் நரேந்திர மோடி தன் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டு, அதன்பிறகே முன்னேறினார்' எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், `எனக்கு எந்த உதவியும் வேண்டாம்; தயவு செய்து என்னைத் தனியாக விடுங்கள். அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்' என கேட்டுக் கொண்டுள்ளார் ஹனன்.