வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (27/07/2018)

கடைசி தொடர்பு:12:55 (27/07/2018)

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு - சொல்கிறார் குமாரசாமி

``காவிரி விவகாரத்தில் சட்டரீதியாகவோ, நீதிமன்றங்கள் வாயிலாகவோ தீர்வு காண முடியாது'' என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

குமாரசாமி

சந்திரக கிரகணத்தையொட்டி ஏழுமலையானைத் தரிசிக்க கர்நாட முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் குடும்பத்துடன் நேற்று திருப்பதி சென்றிருந்தனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்று உபசரித்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் குமாரசாமி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அங்கு அவருக்குச் சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. 

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, ``மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களுக்குத்தான் நன்மை. இதன் மூலம் கடலில் வீணாகக் கலக்கும் நீரை வெகுவாக சேகரிக்க முடியும். காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ எந்தத் தீர்வும் காண முடியாது. இந்தப் பிரச்னையில் கலந்தாலோசித்து நல்ல தீர்வை எட்ட தமிழக தலைவர்கள் முன்வர வேண்டும். அதற்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நல்ல புத்தியை வழங்க வேண்டும் என நான் ஏழுமலையானை வேண்டிக்கொண்டுள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம், அரசியல் சாசனம் ஆகியவற்றின் மூலம்கூட காவிரி பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்காது. பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு” எனக் கூறியுள்ளார்.