வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (27/07/2018)

கடைசி தொடர்பு:16:55 (27/07/2018)

``முழு கேரளாவும் ஹனானுக்கு ஆதரவாக உள்ளது!’’ - மீன் விற்ற மாணவிக்குப் பினராயி பாராட்டு

கேரளாவில் மீன் விற்று அதில், கிடைத்த வருமானத்தில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

பினராயி விஜயன்

கொச்சியில் 19 வயது மாணவி ஹனான் மனநிலை சரியில்லாத தாயைக் கவனித்துக்கொண்டு மீன் விற்று அதில் கிடைத்த வருவாயில் கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருந்தார். இவர் குறித்து மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட, அவருக்கு நிதியுதவி குவிந்தது. மலையாள இயக்குநர் அருண் கோபி தன் புதிய படத்தில் நடிகர் பிரணவ் மோகன்லாலுடன் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் மாணவி குறித்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து பலரும் விமர்சித்தனர். மாணவிக்குப் பல பிரபலங்கள் ஆதரவளித்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், படித்துக்கொண்டே வருமானம் ஈட்டி குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட ஹனானை 'ரியல் வாரியர்' என்று பாராட்டியுள்ளார். 

கேரள மாநில சைபர் கிரைம் போலீஸாருக்கு சமூகவலைதளங்களில் ஹனானை விமர்சிக்க காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவிக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மாணவி மீன் விற்கும் புகைப்படத்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பினராயி விஜயன், ``சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடும் போது ஒவ்வொருவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். பலரும் உண்மைத் தன்மையை ஆராயாமல் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். இது கண்டிக்கத்தக்க விஷயம். முழு கேரளாவும் ஹனானுக்குப் பின்னால் நிற்கிறது'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க