வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (27/07/2018)

`1,800 அரசுப் பள்ளிகளில் ஓராசிரியர்கூட இல்லை!’ - அதிர்ச்சியடைந்த தலைமை நீதிபதி

ஓராசிரியர் அரசுப் பள்ளிகளில், பணியில் இருந்த ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு யாரும் பணியில் சேர முன்வராததால் 1,800 ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்ற தகவலால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.

ஓராசிரியர் பள்ளி

ஹைதராபாத் நீதிமன்றத்தில், வெங்கட்ரெட்டி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளதால் கவலை அளிப்பதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உடனடியாக மேம்படுத்துமாறு தெலங்கானா அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

அந்த வழக்கு, தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அர்ஜூன் குமார்,  ‘தெலங்கானா அரசு சமீபத்தில் மாநிலம் முழுவதும் கல்வித் துறையில் பணியிட மாற்றத்தை அறிவித்தது. அதில், பல பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்கள் வேறு இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். 

அதன்படி, ஓராசிரியர் பள்ளிகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் உத்தரவு பெற்றவர்கள், உடனே சென்று பணியில் சேர்ந்துவிட்ட போதிலும், ஓராசிரியர் பள்ளிக்கு மாற்றப்பட்டவர்கள் இதுவரை பணியில் சேராமல் இருக்கிறார்கள். அவர்கள், எப்படியாவது வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றுவிட வேண்டும் என்பதற்கான முயற்சியில் தீவிரம்காட்டி வருவதால், மாநிலம் முழுவதும் 1,800 ஓராசிரியர் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களே இல்லாத நிலைமை உள்ளது’ எனத் தெரிவித்தார். 

அதைக் கேட்ட தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். ’’ஓராசிரியர் பள்ளிகளில் இருந்த ஆசிரியரும் வராவிட்டால், அந்தப் பள்ளிகள் எப்படி செயல்படும்? அதனால் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், வரும் திங்கள்கிழமைக்குள் (30-ம் தேதி) இந்தப் பிரச்னை தொடர்பான முழு விவரத்தையும் கல்வித் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

பள்ளி

’’கேரளாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்க, அங்குள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள். அதனால், அந்தப் பள்ளிகள் சிறப்பான வகையில் செயல்படுகின்றன. ஆனால், தெலங்கானாவில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களில் 50 சதவிகிதம் பேர் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு படிக்கவோ எழுதவோ தெரியாத நிலையில் இருக்கிறார்கள். அதனால், தெலங்கானா எம்.எல்.ஏ-க்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உதவலாம்’’ என தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் ஆலோசனை தெரிவித்தார்.