உத்தரபிரதேசத்தை புரட்டிப்போட்ட மழை - ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்த சோகம்

உத்தரபிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் நேற்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

கடந்த சில வாரங்களாகவே வட மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா போன்ற பல மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோயுள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையினால் நேற்று மட்டும் 27பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆக்ராவில் நான்கு பேரும், மணிப்பூரில் 4 பேரும், முசாஃபர் நகர் மற்றும் காஸ்கனியில் மூன்று பேர், மேரட், பேர்லி ஆகிய இடங்களில் இரண்டு பேரும், கான்பூர் மதுரா, காஸியாபாத், ஹாபூர், ஜான்சி, ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மேலும் இரண்டு நாள்களுக்குப் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து தருமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஆங்காங்கே தொடர்ந்து மீட்புப்பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!