வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (28/07/2018)

கடைசி தொடர்பு:08:40 (28/07/2018)

`ஆதார் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்..!' -ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பரிந்துரை

ஆதார் தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பாக மாநிலங்களின் பொறுப்புகளை வரையறுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்

அரசின் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதார் தகவல் திருடப்படுவதாகவும், ஒருவரின் தனிப்பட்ட தகவலை ஆதார் உடன் இணைப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆதார் தொடர்பான பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன். இதற்கிடையில், ஆதார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு அமைத்தது. 

 ஆதார் தொடர்பான விசாரணை முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் சமர்ப்பித்துள்ளனர். அதில், `ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள தகவல்களை பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது. `ஆதார் தகவல் பாதுகாப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. குடிமகனின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆதார் தகவல் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்களின் பொறுப்புகளை வரையறுக்க வேண்டியது மிகவும் அவசியம். விதிகளை மீறுவோருக்குத் தண்டனை விதிக்கும் ஆணையத்தை, பிரத்யேக அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி அளித்துள்ளார்.