வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (28/07/2018)

கடைசி தொடர்பு:11:05 (28/07/2018)

‘ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்’ - யோகி ஆதித்யநாத்திடம் சீருடையில் ஆசிபெற்ற காவலர்

உத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர், சீருடை அணிந்தபடி மண்டியிட்டு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசி பெறும் காட்சிகள் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

யோகி

PhotoCredits / facebook@Praveen Kumar Singh

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசீர்வாதம் பெறுவது போன்ற புகைப்படங்களைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அவர் பதிவிட்டுள்ள மூன்று புகைப்படங்களில், முதல் படத்தில் சீருடை அணிந்த காவலர் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன் மண்டியிட்டு இரு கைகளையும் கூப்பியபடி ஆசீர்வாதம் பெறுகிறார். இரண்டாவது படத்தில், யோகிக்கு திலகமிடுகிறார். மூன்றாவது படத்தில், மண்டியிட்டபடியே யோகிக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்கிறார் அந்தக் காவலர். இந்தப் படங்களைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, ‘ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ’ என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ளார். 

கோரக்பூரில் உள்ள கோரக்நாத் என்ற பகுதியில் சர்க்கிள் ஆபீஸராகப் பணிபுரிபவர், பிரவீன் குமார் சிங். இவருக்குக் கீழ் சில காவல் நிலையங்கள் உள்ளன. இப்படியிருக்க, இவர் காவல் சீருடையில் முதல்வரிடம் மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இவருக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.