வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (28/07/2018)

கடைசி தொடர்பு:11:38 (28/07/2018)

1,400 கி.மீ தூரம் கடக்க 1275 நாள்கள்... ரயில்வே துறையில் தொடரும் அலட்சியம்!

ஆந்திராவிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு சரக்கு ரயில்மூலம் அனுப்பிவைக்கப்பட்ட உரம், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய இடத்தைச் சென்றடைந்துள்ளது. 1,400 கி.மீ தூரத்தைக் கடக்க 1,275 நாள்கள் எடுத்துக்கொண்ட ரயில்வே துறையின் அலட்சியம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரயில்வே புக்கிங் பில்

ரயில் போக்குவரத்தில் ஏற்படும் காலதாமதத்தைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. பயணிகள் ரயில் சேவையில் குறைபாடு அல்லது காலதாமதம் ஏற்பட்டால், அந்த மண்டலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட மாட்டாது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் அறிவித்தார். ஆனாலும்கூட, ரயில்வே துறையில் அலட்சியம் மேலோங்கி இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில், ஒருவர் தனது சரக்குகளை மூன்றரை ஆண்டு தாமதத்துக்குப் பின்னர் பெற்றுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி கிராமத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர், ஆந்திராவில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்தில் உரம் கொள்முதல்செய்தார். அந்த நிறுவனம், அதை சரக்கு ரயிலின் தனி வேகனில் (வேகன் எண்:107462) அனுப்பிவைத்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி சரக்கு அனுப்பப்பட்டது. 

ஆனால், சரக்கு உரிய நேரத்தில் பஸ்தி கிராமத்தைச் சென்றடையவில்லை. அதனால், அந்த வணிகர் ரயில்வே துறையின் பல்வேறு அதிகாரிகளுக்கும் பலமுறை தொடர்ச்சியாகப் புகார் செய்தும் சரக்கு வந்து சேரவில்லை. தொடர்ந்து, அவர் பல அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி அவருக்குச் சேரவேண்டிய உரம் அடங்கிய சரக்கு ரயிலின் பெட்டி, பஸ்தி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 1400 கி.மீ தூரத்தில் உள்ள ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 1,275 நாள்களுக்குப் பின்னர் சரக்கு வந்து சேர்ந்ததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். 

சரக்கு ரயில்

நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் சரக்கு வந்துசேர்ந்த போதிலும், அதில் இருந்த டி.ஏ.பி உரம் பழையதாகிப் போனதால், பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாக அந்த வணிகர் வேதனை தெரிவித்துள்ளார். இந்த தாமதத்துக்குக் காரணமான ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்மீது ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஆனால், ரயில்வே துறையில் அலட்சியம் என்பது இது முதல் முறையல்ல என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். கடந்த மார்ச் மாதத்தில் பாணிபட் முதல் டெல்லி வரை இயங்கக்கூடிய பயணிகள் ரயில் (64464), தவறான வழித்தடத்தில் இயக்கப்பட்டதுடன், புது டெல்லிக்குச் செல்வதற்குப் பதிலாக பழைய டெல்லி ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. இந்தத் தவறுக்குக் காரணமான ரயில்வே ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.

அத்துடன், கடந்த மாதத்தில் டெல்லி மற்றும் ராஞ்சி இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் உள்ள புதிய கோச்சுகள் மர்மமான முறையில் மாயமாகின. அந்தப் பெட்டிகளை ரயில்வே நிர்வாகத்தினர் தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்திய ரயில்வே துறையினர், ஏதோவொரு கும்பல் திட்டமிட்டு அந்த புதிய ரயில் பெட்டிகளைக் குறிவைத்துத் திருடிவிட்டதாகவும், ரயில்வே ஊழியர்கள் சிலரின் ஒத்துழைப்பு இருப்பதால், அதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னரும் ரயில்வே துறை பாடம் படிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.