டெல்லியில் 3 குழந்தைகள் பட்டினிச்சாவு விவகாரத்தில் திடீர் திருப்பம்!

டெல்லியில், பசியால் உயிரிழந்த 3 குழந்தைகள் விவகாரத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ``குழந்தைகளுக்கு அறியப்படாத மருந்து ஒன்றை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்திருக்கிறார் குழந்தைகளின் தந்தை'' என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பட்டினிச்சாவு

டெல்லி மாண்டவலியில், மான்ஷி (8), ஷிகா (4), பெரா (2) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் வறுமையின் காரணமாக ஒரு வாரம் பட்டினி கிடந்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், 8 வயது சிறுமி மான்ஷியின் வங்கிக்கணக்கில் 1,800 ரூபாய் பணம் இருந்துள்ளது. வங்கியில் பணம் இருந்ததுகூட தெரியாமல் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. நாட்டின் தலைநகரிலேயே இந்த நிலைமையா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உடல்கூறு ஆய்வு செய்ததில், 3 குழந்தைகளின் வயிற்றில் உணவு இருந்ததற்கான அடையாளம் சிறிதளவும் இல்லை எனக் கண்டறியப்பட்டது. நீண்ட காலமாக ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்துள்ளனர். குழந்தைகள் தங்கியிருந்த இடத்தில் நடத்திய சோதனையில், வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சில மாத்திரைகளையும், சில மருந்து பாட்டில்களையும் தடயவியல் குழுவினர் கைப்பற்றினர்.

இதையடுத்து, உரிய விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், திருப்பு முனையாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் உயிரிழந்துள்ள விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், `உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்து, அதைச் சரிசெய்வதற்கான உரிய மருந்துகளைப் பெற்றோர் கொடுக்கவில்லை. இந்நிலையில், திடீரென மற்ற 2 குழந்தைகளுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் தந்தை மங்கள்சிங் கடந்த 23-ம் தேதி இரவில், குழந்தைகளுக்கு அறியப்படாத மருந்து ஒன்றைச் சுடு தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார்' எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். இதனால், குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், காணாமல்போன தனது ரிக்ஷாவை தேடிச் செல்வதாகக்கூறி கடந்த 24-ம் தேதியில் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் மங்கள்சிங். இன்னும், அவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!