பீகாரில் 34 சிறுமிகளுக்கு நடந்த கொடுமை! மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி | Bihar home settler case harassment girl rates has increased

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (28/07/2018)

கடைசி தொடர்பு:19:30 (28/07/2018)

பீகாரில் 34 சிறுமிகளுக்கு நடந்த கொடுமை! மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

பீகாரில் உள்ள அரசு காப்பகத்தில், 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பீகார்

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களை மீட்டெடுத்த போலீஸார், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், காப்பகத்தில் தங்கியிருந்த பெண் ஒருவரைக் கொலைசெய்து, காப்பக வளாகத்துக்குள் உடல் புதைக்கப்பட்டதாக அங்குள்ள பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. மக்களவையில் நடந்த விவாதத்திலும் இந்த விவகாரம்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ- விசாரிக்க பரிந்துரை செய்தார் முதல்வர் நிதிஷ் குமார். 

இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்ற புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், `காப்பகத்தின்மீது எழுந்த புகாரை அடுத்து, அங்கு தங்கியிருந்த 42 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான மருத்துவ அறிக்கையில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகத் தெரியவந்தது. ஆனால், தற்போது மருத்துவர்கள் அளித்த அறிக்கையில், 34 சிறுமியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் சொல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரைக் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்' என்றார். முன்னதாக, மும்பை தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆய்வில், காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுவந்தது தெரியவந்தது.