மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம்! | Sterlite administration explains about allegations

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (28/07/2018)

கடைசி தொடர்பு:17:41 (28/07/2018)

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம்!

``ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட உலோகங்கள் அதிகமாக உள்ளதாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்த கருத்துக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் விளக்கம்

நாடாளுமன்ற குளிர்காலக்  கூட்டத் தொடரில், மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா, தூத்துக்குடி நிலத்தடி நீரின் தன்மைகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், 'தூத்துக்குடி சிப்காட் பகுதியில்  மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று தெரியவந்தது. அந்த நீரில், ஈயம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, ஆர்சனிக் ஆகியவற்றின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமாக உள்ளது' என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் கூறிய சிப்காட் பகுதியில்தான் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.

மத்திய அமைச்சர்

இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டெர்லைட் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், `கடந்த 1996-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாதந்தோறும் சிப்காட் பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில், நிலத்தடி நீரைப் பரிசோதித்துவருகிறது. அதில், `கடந்த 5 ஆண்டுகளில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அறிக்கையில், நிலத்தடி நீரில் ஆர்சனிக் என்ற உலோகம் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. அதேபோல, மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்சனிக் இருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அமைச்சர் குறிப்பிட்ட உலோகங்கள், நிலத்தடிநீரில் கலக்க வாய்ப்பில்லாத வகையில், ஸ்டெர்லைட் ஆலை சார்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள்மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. நிலத்தடி நீரின் தன்மை தொடர்பாக மத்திய அமைச்சரின் அறிவிப்புகுறித்து கூடுதல் தகவல்களைப் பெற, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நாடியுள்ளோம். அதேபோல, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரின் தன்மை குடிப்பதற்கு ஏதுவானதா என்பதுகுறித்து அரசின் வரையறையுடன் இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.