`உங்கள பார்க்கத்தான் இந்தியா வர்றேன்...’ - 66 வயது வங்கி ஊழியரை ஏமாற்றிய ஃபேக் ஐடி ஜெனி | Retired bank officer lost his money by facebook love

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (28/07/2018)

கடைசி தொடர்பு:18:05 (28/07/2018)

`உங்கள பார்க்கத்தான் இந்தியா வர்றேன்...’ - 66 வயது வங்கி ஊழியரை ஏமாற்றிய ஃபேக் ஐடி ஜெனி

ஃபேஸ்புக் காதலால் 35 லட்ச ரூபாய் பணத்தை இழந்து திண்டாடிவருகிறார், 66 வயது ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர்.

ஃபேஸ்புக்
 

காதலுக்கு வயதில்லை, கண்ணில்லை என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர், ராம் (பெயர் மாற்றம்). 66 வயதான ராம், வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தனியாக வசித்துவரும் ராம், பொழுதுபோக்காக ஃபேஸ்புக் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். கடந்த மே 19-ம் தேதி, ஜெனி ஆண்டர்சன் என்னும் ஐடி-யில் இருந்து நட்பு அழைப்பு வந்தது. இவரும் ஆர்வக்கோளாறில் நட்பை ஏற்றுக்கொண்டார். ஜெனி ஐ.டி-யில் இருந்து ராமுக்கு தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. அந்தப் பெண் ஐடி-யுடன் சாட் செய்யத் தொடங்கியுள்ளார் ராம். `தான் லண்டனில் வசிப்பதாகவும், நகைக்கடை வைத்திருப்பதாகவும்' ஜெனி தெரிவித்துள்ளார். ‘நகைகளை வாங்க அடிக்கடி இந்தியா வருவேன்’ என்றும் கூறியிருக்கிறார். ஃபேஸ்புக் நட்பும் வாட்ஸ்அப் வரை சென்றது.

ஜெனி - ராம் நட்பு காதலாக மாறியது. ஜூன் 1-ம் தேதி, தான் இந்தியா வருவதாகக் கூறியிருக்கிறார் ஜெனி.  விமானத்தில் இருந்தபடி புகைப்படங்களை அனுப்பி, `உங்களைச் சந்திக்க வந்துகொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சில மணி நேரங்களில் ராமுக்கு போன் அழைப்பு வந்தது. போனில் பெண் குரல்,..  `நான் பூஜா. மும்பை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரி. உங்கள் தோழி ஜெனி ஆண்டர்சன் இரண்டு முக்கிய ஆவணங்களைக் கொண்டுவரவில்லை. அவர், மும்பையில் இருந்து டெல்லிக்கு வர முடியாது. ஜெனியிடம் வெளிநாட்டுப் பணம் 68 லட்சம் ரூபாய் உள்ளது. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை. உங்களைப் பார்க்க இந்தியா வந்ததாகக் கூறுகிறார். நீங்கள் அவரிடம் பேசுங்கள்...’ என்று சொல்லி போனை ஜெனியிடம் கொடுத்துள்ளார்.

ஜெனி அழுதுகொண்டே, ‘இங்கு என்னைப் பிடித்துவைத்து ஃபைன் கட்டச் சொல்கிறார்கள். என்னிடம் வெளிநாட்டுப் பணம்தான் உள்ளது. அதையும் கைப்பற்றிக்கொண்டனர். எனக்கு அவசரமாக 35 லட்சம் ரூபாய் வேண்டும். இங்கு ஃபைன் கட்டிவிட்டு, உடனே உங்களுக்குத் தந்துவிடுகிறேன்’ என்று கதறியுள்ளார்.

ராம் செய்வதறியாது திகைக்க... மீண்டும் மீண்டும் போன்செய்து டார்ச்சர் செய்துள்ளார் ஜெனி. இவரும், தன்னிடம் இருந்த 13 லட்சம் ரூபாயுடன் கடன் வாங்கிய 22 லட்சம் ரூபாயையும் ஜெனிக்கு நெட்பேங்கிங் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார். ஜெனி கொடுத்த வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ராம் பணத்தை அனுப்பிவைத்துள்ளார்.

பணம் டிரான்ஸ்ஃபர் ஆனதும், ஜெனி போன் நம்பர் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. ஜூன் 1-ம் தேதி வருவதாகச் சொன்ன ஜெனி, கடைசிவரை வரவேயில்லை.  `தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம்' என்பது ராமுக்கு பின்னர்தான் புரிந்தது. குருகிராமில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.   `சைபர் க்ரைம் உதவியுடன் போலீஸ் இந்த வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது.  ஃபேஸ்புக்கில் ஜெனி என்னும் பெயரில் விரிக்கப்பட்ட மாய வலையில், 66 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சிக்கிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Source : TOI

நீங்க எப்படி பீல் பண்றீங்க