வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (29/07/2018)

கடைசி தொடர்பு:11:28 (29/07/2018)

`விபத்து ஏற்பட இதுதான் காரணம்!’ - மகாராஷ்டிரா பேருந்து விபத்தின் கடைசி நிமிடங்களை விவரிக்கும் பயணி

மகாராஷ்ட்ராவில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார், தற்போது விபத்து நடந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளை அவர் அதிர்ச்சி கலந்த பயத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார். 

விபத்து

மகராஷ்ட்ரா மாநிலம், டாபோலி வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் சுற்றுலா சென்றுள்ளனர். சுமார் 34 பயணிகளுடன் ராய்கர்ட் மாவட்டம், அம்பெனெலி என்னும் இடத்தில் உள்ள மலைப் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈட்டுப்பட்டுள்ளனர். இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பேருந்தில் பயணித்தவர்கள்

500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து தனி ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். விபத்து குறித்து உயிர் பிழைத்த பிரகாஷ் சாவந்த் பேசும் போது, “இந்தப் பயணம் தொடங்கும் போது எங்களுடன் 40 பேர் புறப்பட்டனர். ஆனால் நாங்கள் புக் செய்த பேருந்தில் இடமில்லாததால் 34 பேரை மட்டுமே அழைத்து வந்தோம். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழைபெய்ததால் பாதை முழுவதும் சேறாக இருந்தது. மலைப் பாதையின் வளைவில் சேறு மற்றும் சிறிய சிறிய கற்கள் இருந்ததால், வண்டியின் கட்டுப்பாடு இழந்தது. இதுவே விபத்துக்கு முக்கியக் காரணம். 

யாரும் எதிர்பாராதபோது பேருந்து சறுக்கி பள்ளத்தில் விழுந்தது. என் கண்முன்னே என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை. பேருந்து கீழே விழுந்ததும் முதலில் அங்குள்ள மரக்கிளைகளில் மாட்டிக்கொண்டது. அப்போது நான் சுதாரித்துக்கொண்டு பேருந்தில் இருந்து வெளியே குதித்துவிட்டேன். பிறகு, மேலே ஏறி வந்து பார்க்கும் போது அங்கு பொதுமக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் போன் வாங்கி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தேன்” எனக் கூறினார். 

இந்தப் பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராட்ஷ்ட்ரா அரசு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. காயமடைந்தவரின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.