மகளின் நினைவாக ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் அரசுப் பள்ளி கிளர்க்! | karnataka based clerk has started paying fees of girl students in memory of his late daughter

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (29/07/2018)

கடைசி தொடர்பு:12:30 (29/07/2018)

மகளின் நினைவாக ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் அரசுப் பள்ளி கிளர்க்!

கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளின் கல்விக் கட்டணத்தை எடுத்துச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். உயிரிழந்த தனது மகளின் நினைவாக இத்தகைய மனிதாபிமான செயலில் ஈடுபட்டுள்ள அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

பசவராஜ் கர்நாடகா

Photo Credit -ANI

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவராஜ். இவர், மக்டம்புரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கிளர்க்காகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய மகள் அண்மையில் உயிரிழந்துவிட்டார். மகளை இழந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் மிகவும் தவித்து வந்திருக்கிறார் பசவராஜ். அப்போது, மனவேதனையில் வாடிய அவர், மகளின் நினைவாக தனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளின் கல்வி கட்டணச் செலவை ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து பசவராஜ் கூறுகையில், `எனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளின் கல்விக் கட்டணச் செலவை, இந்த ஆண்டுமுதல், ஏற்றுக் கட்டலாம் என முடிவு செய்துள்ளேன். இதனை என் மகளுக்கு நான் செய்யும் கடமையாகக் கருதுகிறேன்' என்றார். 

பாத்திமா கர்நாடகாபசவராஜூக்கு நன்றி என பேசத் தொடங்கிய பாத்திமா என்ற மாணவி, `ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எங்களால், கல்வி கட்டணத்தைச் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம். பொருளாதாரரீதியாக பின் தங்கிய குடும்பச் சூழலில் இருந்து வரும் என்னைப் போன்ற ஏழை மாணவிகளுக்கு உதவி செய்ய அவர் முன்வந்துள்ளார். தன் மகளின் நினைவால் உதவ முன்வந்திருப்பது என்னைப் போன்ற மாணவிகள் கல்வியில் மேம்பட உந்துததாலக உள்ளது. அவரது மகளின் ஆன்மா சாந்தியடைய விரும்புகிறோம்' என்றார்.