வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (29/07/2018)

கடைசி தொடர்பு:16:30 (29/07/2018)

ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா... மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகையா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயணச் சலுகை திட்டத்தின் கீழ், சலுகையுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையைப் பணியாளர்கள் அமைச்சகம் இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு

கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசிடம் சமர்பித்த, `மத்திய அரசாங்கப் பணி ஊழியர்கள் விடுப்பு பயணச் சலுகை திட்டத்தின் கீழ் சார்க் நாடுகளுக்குச் சுற்றுலா செல்லவும், அதற்கான பயண டிக்கெட்கள் மற்றும் விடுப்புகள்' வழங்கும் திட்ட அறிக்கையை  கைவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல மத்திய பணியாளர்களுக்கு சலுகை வழங்கப்பட உள்ளது. 

இதற்காக, உள்துறை, சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்து துறை மற்றும் செலவினம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டது.இதனையடுத்து, விடுப்பு பயணச் சலுகையில்  பணியாளர்கள் சுற்றுலா செல்வதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையைப் பணியாளர்கள் அமைச்சகம் இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், சுற்றுலா செல்லும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகப் பணியாளர்கள் அமைச்சக தெரிவித்துள்ளது.