இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு மற்றுமொரு தங்கம்

பின்லாந்தில் நடைபெற்ற சவோ தடகளப் போட்டியில் (Savo Games) இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டி, சோடிவில்லி தடகளப் போட்டி என நீரஜின் பட்டியலில் தொடர்ந்து தங்கப் பதக்கங்கள் குவிந்து வருகின்றன. பின்லாந்தின் லபின்லஹடி (Lapinlahti) நகரில் நடந்துவந்த சவோ தடகளப் போட்டியானது உலக அளவில் நடக்கும் தடகளப் போட்டிகளில் முக்கியமானது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றப் போட்டியில் 85.69 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்துள்ளார் நீரஜ். சீன தைபேவைச்(தைவான்) சேர்ந்த செங் சவோ - சுன் (Cheng Chao-Tsun) 82.52 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். செங் சவோ-சுன்தான் ஆசியாவிலேயே அதிக தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ள தடகள வீரர். கடந்த வருடப் போட்டியின்போது 91.36 மீட்டர் வரை எறிந்துள்ளார். ஆனால், இந்த சீசனில் நீரஜின் கையே ஓங்கி இருக்கிறது. இந்த ஆண்டு முன்னதாக நடந்த தடகளப் போட்டியில் 87.43 மீட்டர் வரை எறிந்துள்ளார். ஆசியாவின் ஈட்டி எறியும் தடகள வீரர்களில் நீரஜே முன்னணியில் இருக்கிறார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ்தான். தற்போது 20 வயதான நீரஜ் சோப்ரா 2016-ல் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார். அப்போது அவருக்குப் பயிற்சியாளராக இருந்த கேரி கால்வெர்ட்(Gary Calvert) கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதற்கு நீரஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். 

இந்த வருடம் இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 2020-ல் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கிலும் நீரஜ் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பின்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!