வெளியிடப்பட்ட நேரம்: 03:27 (30/07/2018)

கடைசி தொடர்பு:03:35 (30/07/2018)

நான்கு மாதக் குழந்தையைத் தாக்கிப்பறித்த சிறுத்தை!

குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோட்டா உதய்பூர் மாவட்டத்திலுள்ள ராய்பூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதும், அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும் அவ்வப்போது நிகழக்கூடியதே. 

சிறுத்தை

இரண்டு நாட்கள் முன்னர், விக்ரம் ரத்வா என்பவர், தனது மனைவி சப்னா மற்றும் நான்கு மாதக்குழந்தை ஆயுஷுடன் அப்பகுதியில் பைக்கில் பயணம் செய்தபோது சிறுத்தை ஒன்று குறுக்கிட்டது. இவர்களது பைக்கைத் துரத்திவந்த சிறுத்தை, நொடிப்பொழுதில் இவர்களைத் தாக்கி சப்னாவின் கையிலிருந்த நான்கு மாதக்குழந்தையை பறித்து ஓடப்பார்த்தது. தங்களது குழந்தையைக் காப்பாற்றவேண்டி இருவரும் உதவிக்காகக் குரலெழுப்ப, அப்பகுதியிலிருந்த கிராமத்து மக்கள், விரைந்துவந்து சிறுத்தையைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அடிபட்ட சிறுத்தை, வலி பொறுக்கமுடியாமல் தன் பிடியிலிருந்த குழந்தையை விட்டுவிட்டுத் தப்பியோடியது.

அதன்பின்னர், அக்குழந்தை மற்றும் கணவன் மனைவி என மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு மாதக் குழந்தை ஆயுஷின் முதுகிலும், கால்களிலும் பலத்த காயம் அடைந்துள்ளது. பெற்றோருக்கு ஆங்காங்கே சிறு சிறு சிராய்ப்புகள் மட்டும் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் பாதுகாப்பில்லாத பைக்கில் குடும்பத்தோடு பயணிப்பது தவறென்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் அந்த சிறுத்தைகள் மீண்டும் வராதபடி அவற்றின்மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.