யமுனை ஆற்றில் வெள்ளம் - டெல்லியில் 3000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்! | Yamuna waters rise, 3000 people evacuated from low-lying areas in Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (30/07/2018)

கடைசி தொடர்பு:07:30 (30/07/2018)

யமுனை ஆற்றில் வெள்ளம் - டெல்லியில் 3000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்!

யமுனை

வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் நிறைய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுவருகிறது. அதன் விளைவாக டெல்லியின் யமுனை ஆற்றில் நாளுக்கு நாள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஹரியானாவின் ஹட்னிகுண்ட் குறுக்கு அணையில் (Hathinikund barrage) இருந்து அளவுக்கு அதிகமான நீர் வெளியேறுவதால் டெல்லியின் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 5,00,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நேற்று  மாலை 5 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் தண்ணீர் அளவானது 205 மீட்டர். இது மிகவும் ஆபத்தானது. இதனால் டெல்லியின் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தண்ணீர் வரத்து குறையாமல் இருப்பதால் இன்னும் இரண்டு நாள்களில் யமுனை ஆற்றின் அளவு 206 மீட்டாரைத் தாண்டிவிடும். கடந்த ஐந்து வருடங்களில் இப்படியான நீர்வரத்து நிகழவே இல்லை. இதற்கு முன்னதாக 2013-ல்தான் யமுனையின் அளவு 207 மீட்டரைத் தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 8 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், இப்போது அதைவிடக் குறைவுதான். ஹட்னிகுண்ட் குறுக்கு அணையிலிருந்து இவ்வளவு வேகத்தில் தண்ணீர் வந்தால் இரண்டு நாள்களில் அபாய அளவான 206-ஐ எட்டிவிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கு 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். டெல்லி அரசு 500 டென்ட்டுகளை இதற்காகவே உருவாக்கியுள்ளது.