`பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் தேவை..!' - மத்திய சட்ட அமைச்சகம்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க  நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம், சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 

நீதிமன்றங்கள்

டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கும் வகையில் மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதையடுத்து, பல நகரங்களில் பதிவு செய்யப்படும் பாலியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தியது. 

இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், `பாலியல் வழக்குகளை விசாரிக்க நாடுமுழுவதும் 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டியுள்ளது. நீதிமன்றங்களை அமைக்க ரூ.767.25 கோடி செலவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்காக ரூ.464 கோடி வழங்க வேண்டும்' என்று விரிவான அறிக்கை தயாரித்து உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை விசாரிக்க மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைத்திட உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!