வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (30/07/2018)

கடைசி தொடர்பு:13:14 (30/07/2018)

போட்டியைக் காண வந்தவர்களுக்கு நடந்த துயரம்! - அதிர்ச்சி வீடியோ

ராஜஸ்தானில் தகரத்தால் போடப்பட்டிருந்த ஷெட் சரிந்ததில் அதன் மீது நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் கீழே விழும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சரிந்த மேற்கூரை

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் உள்ள பத்மபூரில் ஆண்டுதோறும் டிராக்டர் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பந்தயம் நேற்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டியைக் காண பத்மபூரில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, போட்டி நடைபெறும் இடத்துக்கு அருகில், தகரத்தால் ஆன ஷெட் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த ஷெட் மீது நூற்றுக்கணக்கான பேர் ஏறி நின்று ஆர்வமாக போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

திடீரென யாரும் எதிர்பாராத விதமாகத் தகர ஷெட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதன் மீது நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கங்கா நகர் எஸ்.பி யோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி வாங்கவில்லை என்றும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அங்கு வந்தவர்கள் தற்செயலாகப் போட்டியைப் படம்பிடித்துக்கொண்டிருக்கும்போது அவர்களின் போன்களில் நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் காட்சிகளும் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.