‘போலீஸ் அனுமதி தேவையில்லை’ - ஆளுநரின் அறிக்கையைக் கிழித்தெறிந்த கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதை முறைப்படுத்த அம்மாநில ஆளுநர் அனில் பைஜால் ஒரு குழுவை நியமித்திருந்தார். அவர்கள் வழங்கிய அறிக்கையை டெல்லி முதல்வர் கிழித்துள்ளார். 

குடியுரிமை நலச் சங்கம் மற்றும் மார்க்கெட் சங்கங்கள் இணைந்து, டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், டெல்லி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன் மூலம் 50 சதவிகிதம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது'' எனக் கூறினார். பின்னர் ஆளுநர் அமைத்த குழுவின் அறிக்கையை மேடையிலேயே படித்துக் காட்டினார். அதில், ‘பொது இடங்களில் கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை கட்டட உரிமையாளரும், சிசிடிவியை பதிவுசெய்வோரும் அதற்கான உரிய காவல் அதிகாரிக்கு அறிக்கை அளிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இதைப் படித்துக்காட்டி விட்டு ஆளுநர் அமைத்தக் குழு அளித்த அறிக்கையைப் பொது மேடையிலேயே கிழித்தெறிந்தார். பின்னர், கண்காணிப்புக் கேமரா பொருத்த இனி காவல்துறையின் அனுமதி அவசியமில்லை. அதற்கான அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும்'' எனக் கூறினார். 

``அனைத்துக் காட்சிகளும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் சில சமயம் அவர்கள் செய்யும் தவறுகளும் வெளியில் தெரியாமல் போய்விடும் என்பதால்தான் அரவிந்த் கெஜ்ரிவல் அதை எதிர்த்தார்'' என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் முதல்வரின் இந்தச் செயல் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!